Tuesday, 4 October 2016

நாங்குநேரியில் இரயில் எஞ்சின் தொழிற்சாலை

2006 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 2600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பிறகு அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது. அந்த இடத்தில் ரயில்வேக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஏற்கனவே திருச்சி, பொன்மலை தொழிற்சாலையை விரிவுபடுத்தி ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பயனில்லை. இதைப்போல் தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பாலக்காட்டில் புதிய ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைக்கப்படும் என 2008 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த முடியாத காரணத்தால் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாங்குனேரியில் ஏற்கனவே 2600 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரயில் எஞ்சின் தொழிற்சாலை கொல்கத்தாவில் மட்டுமே உள்ளது. இந்திய ரயில்வேக்கு 2020ம் ஆண்டுக்குள் சுமார் 5334 டீசல் எஞ்சின்களும், 4281 மின்சார எஞ்சின்களும், 50,880 ரயில் பெட்டிகளும் தேவைபடுகிறது. இதற்கென 1,20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேலை வாய்ப்புகளுக்கான தொழிற்சாலைகள் இல்லாத தென் தமிழகம் வளம் பெறும். எனவே, இந்த திட்டத்தை தென்னகத்தில் உள்ள நாங்குனேரியில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment