Tuesday, 4 October 2016

திமுகவுக்கு காங்கிரஸ் கூட்டணி தேவையா?

நேற்று மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தபின், திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என தமாக தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்த அதே வேளையில், தலைவர் கருணாநிதி அவர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திமுகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்துள்ளார்.
எப்போதுமே உள்ளாட்சித் தேர்தலுக்கும், மாநில, மத்திய தேர்தல்களுக்கும் வித்தியாசம் உண்டு. உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அந்தந்தப் பகுதி மக்களிடம் செல்வாக்கு இருந்தால் மட்டுமே பெரும்பாலானவர்களால் வெற்றி பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
காங்கிரஸைப் பொறுத்தவரை சட்டமன்ற‌ மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் சோனியாவுக்காக காங்கிரஸுக்கு வாக்களிக்கின்ற மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. பொதுவாகவே, காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடார் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களே. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக சுமார் 2.5 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த ஒரே காங்கிரஸ் வேட்பாளர் திரு.வசந்தகுமார் மட்டுமே. ஒருவேளை அவரை காங்கிரஸ் தலைவராக அறிவித்திருந்தால் காங்கிரஸின் வாக்குகள் சிதறாமல் கிடைக்கக் கூடும்.
கோமாளித்தன அரசியல் செய்துவரும் ராகுலுக்கு, யாரை எங்கே நியமிப்பது என்ற அறிவும் இருப்பதாகத் தெரியவில்லை. திருநாவுக்கரசரை காங்கிரஸ் தலைவராக நியமித்ததின் மூலம் தமிழகத்தில் காங்கிரஸை அழித்துவிட்டார் ராகுல் என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரஸுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது தென் மாவட்ட மக்கள்தான் என்பதை காங்கிரஸார் எவரும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
மேலும், காங்கிரஸில் இருந்த பெரும்பான்மையான தலைவர்கள் தமாகாவுடன் சென்றுவிட்டனர். அவர்களால், குறிப்பாக உடையார், நாடார் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கணிசமான வாக்கு வங்கியை தமாக வைத்துள்ளது என்பதுதான் உண்மை. (கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேராத இடம் சேர்ந்து வீணாய்ப் போனதை உள்ளாட்சித் தேர்தலில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்)
இன்னொரு விசயம், இப்போதுள்ள சூழ்நிலையில் திமுக கூட்டணியில் தமாகாவுக்கு குறைவான இடங்களை ஒதுக்கினால் கூட பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு ஜி.கே.வாசன் வந்துவிட்டார். எனவே தமாகாவை திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஒரு வகையில் இது திமுகவுக்கு பலமே.
காங்கிரஸைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களை ஒதுக்கியும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் தோற்ற பெரும்பாலான தொகுதிகளில் திமுக போட்டியிட்டிருந்தால் திமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார் என்பது உண்மை. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதாலேயே திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
தமாகா பிரிவு, உள்கட்சிப் பிரச்சினை, தகுதி இல்லாத தலைமை என தத்தளித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸை கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பதோடு தமாகாவை கூட்டணியில் இணைப்பதே திமுகவுக்கு நல்லது என்பதே நம் கருத்து.

No comments:

Post a Comment