Tuesday, 4 October 2016

தாமரைக்கனி


இரண்டு வெட்டரிவாள்களை கிடத்திப் போட்டிருப்பது போல் இருக்கும் இந்த மீசைக்காரர் பெயர் தாமரைக்கனி.

அரசியல்வாதிகளிடையே வன்முறைகள் வெடிப்பதும், அடிதடி நடப்பதும், முட்டிக் கொள்வதும்,மோதிக் கொள்வதும் புதிதல்ல. எத்தனையோ காட்சிகளை தமிழகம் கண்டுள்ளது. அந்த வரலாற்றின் மையப்புள்ளிதான் இந்த தாமரைக்கனி. கையளவு மோதிரத்தை விரலில் அணிந்து தம் கட்சித் தலைமைக்கு விசுவாசம் காட்டியதில் முன்னோடியும் இவர்தான்.

பட்டாலும் மோதிரக் கையால் குட்டுபட வேண்டும் என்று சொல்வார்கள். இவரது மோதிரக் கையால் குத்துபட்டு ரத்தம் சிந்தியவர்கள் ஏராளம்.

பல வருடங்களாக தமிழக சட்டசபையின் தாக்குதல் நாயகனாக வலம் வந்தவர் மறைந்த எம்எல்ஏ. தாமரைக்கனி. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் அசைக்க முடியாத சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர், அவரது செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். இவர்தான் பல தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட பெருமைக்குரியவராக இன்றளவும் இருக்கிறார்.
சட்டசபையில் எம்.ஜி.ஆருக்கு முன்பாகவே, திமுக உறுப்பினராக இருந்த ரஹ்மான்கானை மேசைத் தாண்டிச் சென்று போய் தனது மோதிரக் கையால் சரமாரியாக தாக்கியவர் தாமரைக்கனி.

அதேபோல முன்னாள் அமைச்சரான கேகேஎஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன், அதிமுகவில் இருந்தபோது தாமரைக்கனிக்கும், அவருக்கும் இடையே நடந்த மோதல்கள் மிகப் பிரபலமானவை. அது கடைசியில் ராமச்சந்திரன் முகத்தில் ஆசிட் அடிக்கும் அளவுக்கு விபரீதமாகிப் போனது.

பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றவர் தற்போதைய தேமுதிக அவைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் சட்டசபை உறுப்பினராக இருந்தபோது இவரையும் அடித்தார் தாமரைக்கனி. சட்டசபைக்குள்தான் இந்த தாக்குதல் நடந்தது. ஆனால் பின்னர் பேசுகையில், நான் செல்லமாக தட்டிதான் கொடுத்தேன், அடிக்கவில்லை என்றார்.

இதே தாமரைக்கனியிடம் சரமாரியாக அடி வாங்கிய பெருமைக்குரியவராக முன்னாள தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் இருக்கிறார். சட்டசபைக்குள் வைத்து செல்லக்குமாரை அடித்து வெளுத்து விட்டார் தாமரைக்கனி.

எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர், அவரது மனைவி ஜானகி முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து 1988ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி சட்டசபைக் கூட்டம் நடந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது பெரும் வன்முறை மூண்டது. வெளியிலிருந்து பலர் உள்ளே புகுந்து தாக்கத் தொடங்கினர். மைக்குகள் பறந்தன, வேட்டிகள் கிழிந்தன. மின்விசிறிகள் தூக்கி வீசப்பட்டன. இருக்கைகளைத் தூக்கி அடித்தனர். போலீஸார் உள்ளே புகுந்து தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை போனது.

1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி நடந்த வன்முறையின்போது சட்டசபையில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியையே தாக்கி விட்டனர். அவரது முகத்தில் அதிமுகவினர் குத்தியதாக கருணாநிதி தெரிவித்தார். மேலும் அவரது மூக்குக் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

அதே நாளில், அதே வன்முறையில் தன்னைத்தான் திமுகவினர் தாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா குற்றம் சாட்டினார். மேலும் துரைமுருகன் தனது சேலையைப் பிடித்து இழுத்து கிழித்து, தாக்கியதாக அவர் கூறவே மேலும் பரபரப்பானது.
1999ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி சட்டசபையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் தாமரைக்கனி. அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இருந்த தாமரைக்கனி சரமாரியாக தாக்கினார். இதில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

பதவிக்காக யார் காலிலும் விழாமல், எந்த டயருக்கு அடியிலும் சிக்காமல், அரசியலில் வீரனாகவே வாழ்ந்து மறைந்த இந்த தாமரைக்கனி சிலருக்கு கடைசி காலம் வரை சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தார் என்பதே நம் சமுதாயத்திற்கு கிடைத்த பெருமைதான்.

No comments:

Post a Comment