Tuesday, 4 October 2016

"தெய்வத் திருமகன்" தாணுலிங்க நாடார்

தேசியத்தையும் தெய்வீகத்தையும் உயிர் மூச்சாய் கொண்டவர்களில் முதன்மையானவர். வாய்ச்சொல் வீரர்களாக வலம் வந்தவர்களிடையே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் செயல் வீரராக சாதித்துக் காட்டிய பெருமகனார்.
மண்டைக்காடு கலவரம் நடந்தநேரத்தில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் க‌லவரத்தை நிறுத்தும் விதமாக சமாதான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக எந்த திட்டத்தையும் பற்றி எம்ஜிஆர் பேச தயாராக இல்லை.
அப்போது அக்கினி பிழம்பாக கொதித்துப் போன தாணுலிங்க நாடார், "நீயும் உனது காவல் துறையும் இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாவிட்டால் இங்கிருந்து போய்விடு, இந்துக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பதுன்னு எனக்கு தெரியும்" என முதலமைச்சர் எம்ஜிஆரிடம் தில்லாக கை நீட்டி சொன்னவர் இவர்.
இதனை, "நான் முதலமைச்சர் என்றும் தெரிந்தும் இந்து மக்கள் பாதுகாப்புக்காக நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேராக என்னோட வாதிட்ட தாணுலிங்கம் நாடார், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு, மொழி எல்லை போரில் தலைமை தாங்கி, MPயாக,MLA வாக, எதிர்கட்சி தலைவராக இருந்த மாவீரர் என்பதை இப்போதுதான் அறிந்தேன். என்னுடன் மோதியது எனக்கு இணையான தலைவரே என்று பெருமைப்படுகிறேன்" என்று தாணுலிங்க நாடாரின் துணிச்சலை தமிழக சட்டமன்றத்திலேயே பதிவு செய்தார் முதலமைச்சர் எம்ஜிஆர்.
நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ். மாநாட்டில் கலந்து கொண்ட தாணுலிங்க நாடார், தமிழர்களுக்கு எதிரான மனப்பான்மையுடன் செயல்பட்டுவந்த பால் தாக்கரேவை சந்தித்து, "நாம் அனைவரும் இந்தியர்கள். சகோதரர்கள். தமிழர்களுக்கு எதிரான எந்த நடவைக்கையிலும் ஈடுபடக்கூடாது" என கேட்டுக் கொண்டார். அதன் பிறகே தமிழர் விரோத நடவடிக்கைகளை கைவிட்டது சிவசேனா. இது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளியானது.
அகஸ்தீஸ்வரத்தில் விவேகானந்தா கலை கல்லூரியும், பிள்ளையார்புரத்தில் சிவந்தி ஆதித்தனார் கலை கல்லூரியும், கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் இவரது அயராத‌ முயற்சியால் உருவானதாகும்.
சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு, கன்னியாகுமரி மாவட்டதில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டிற்கு, 144 தடை உத்தரவையும் மீறி 2 இலட்சம் மக்களைத் திரட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர் தாணுலிங்க நாடார்.
எந்தவித பாதுகாப்பு வளையமும் இல்லாமல் உயிரை துச்சமென மதித்து வாழ்ந்த தாணுலிங்க நாடார், நெல்லை மாவட்டம் ஏரல் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, "என்னை சித்திரகுப்தன் அழைக்கிறான். இளைஞர்களே இந்த நாட்டையும் நம் பண்பாட்டையும் நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்" என்ற சாய்ந்தபடி உயிர்விட்டார்.
புண்ணியம் செய்த உயிர்கள்தான் எந்த கஷ்டமும் இல்லாமல் மேலோகம் செல்லும் என்றும் பெரியவர்கள் சொல்லுவர்கள். அதன்படியே தன் இறப்பை தானே அறிவித்தபடி உயிர்துறந்த புண்ணிய ஆத்மாதான் இந்த‌ தாணுலிங்க நாடார்.
இவரது வாழ்க்கைக் குறிப்பில் சில....
1915–ம் வருடம் பிப்ரவரி மாதம் 17–ந்தேதி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் பொற்றையடியில் பிறந்தவர் தாணுலிங்க நாடார். சுதந்திர போராட்டம் மற்றும் எல்கை போராட்ட தியாகியான இவர் படித்து பட்டம் பெற்று காவல்துறை, ராணுவம் மற்றும் வக்கீலாக பணியாற்றி 1947–ம் வருடம் திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராகி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
1948 முதல் 1951 வரை மூன்று வருடம் அன்றைய திருவிதாங்கூர்–கொச்சி சமஸ்தான சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1953–ல் நாகர்கோவில் நகர்மன்ற உறுப்பினராகவும், இரண்டாவது முறையாக திருவிதாங்கூர்–கொச்சி சமஸ்தான சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1954–ல் திருவிதாங்கூர் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதம் சிறையில் இருந்தார்.
1957 முதல் 1962 வரை 5 வருடம் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராகவும், 1964 முதல் 1969 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

No comments:

Post a Comment