அதிமுக என்றில்லாமல் அனைத்துக் கட்சிகளிலுமே பேச்சிலும், எழுத்திலும், செயல்பாட்டிலும் திறமையானவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால், கூட்டம் சேர்க்கின்ற தனித்தன்மை ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும்.
பொதுவாகவே கூட்டம் சேர்க்கின்ற ஒருவரால் தான் மக்கள் தலைவராக முடியும். அதன்படி, ஆரம்ப காலங்களில் கூட்டம் சேர்ப்பதற்காகவே திமுகவில் பயன்படுத்தப்பட்ட எம்ஜிஆர் பின்னர் தலைவரானார். அதைப் போலவே ஜெயலலிதாவுக்கு அந்த திறமை இருந்தது. அதனால்தான் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் மரணத்திற்குப் பின், இரட்டை இலை முடக்கப்பட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்து போட்டியிட்ட போது, ஜானகி அணியில் பி.எச்.பாண்டியன், முத்துச்சாமி என எம்ஜிஆர் ஆட்சியில் பங்கு பெற்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருந்தும், ஜெயலலிதாவுக்கு இருந்த மக்களை ஈர்க்கும் திறமையால் 27 இடங்களில் வெற்றி பெற்றது ஜெயலலிதா அணி. இரண்டாகப் பிரிந்திருந்த கட்சி ஒரே அணியாக ஜெயலலிதாவின் கைவசம் வந்தது. 1991ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார் ஜெயலலிதா.
அதே போன்று, இன்று ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுகவில் உள்ள தலைவர்களில் எவருக்கும் இல்லாத கூட்டம் சேர்க்கின்ற பலம் சரத்குமார் ஒருவருக்கு மட்டுமே உள்ளது. வேறு எவருக்கும் இல்லை.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராயிற்றே சரத்குமார். அவர் எப்படி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.
சரத்குமார் அவர்கள் சமக என்னும் கட்சியை நடத்தி வந்தாலும், இந்திய தேர்தல் ஆணைய விதிகளின் படி அவர் ஒரு அதிமுக உறுப்பினர். ஆம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உறுப்பினராகவே தான் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
சசிகலா கும்பல் போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட பின் நடைபெற்ற சங்கரன் கோவில் மற்றும் புதுக்கோட்டை இடைத்தேர்தல்களின் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் பிரச்சாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் சரத்குமார். அதுமட்டுமல்ல, மேலும் பல தேர்தல்களில் அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டது அனைவரும் அறிந்ததுதான்.
எனவே, அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் ஆதரவைப் பெற்று பொதுச் செயலாளர் ஆகும் தகுதி சரத்குமாருக்கு உள்ளது.
மேலும், ஜெயலலிதாவுக்குப் பின் சரத்குமார் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதையே, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், சென்னை மேயர் சைதை துரைசாமி, நத்தம் விஷ்வநாதன் போன்ற அதிமுகவின் இரண்டாம் நிலை விரும்புகின்றனர். (தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மேலும் பெரும்பாலான அதிமுக தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை)
ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுக இரண்டாகவோ, மூன்றாகவோ நிச்சயம் பிளவுபடும். கட்சிகளை உடைப்பதில் கைதேர்ந்தவரான கலைஞர் அதிமுக உடைவதில் தனக்கு என்ன லாபம் இருக்கிறது என்றுதான் பார்ப்பார்.
அதிமுகவின் இரட்டை இலையை ஒழித்தால் மட்டுமே தமிழத்தில் தாமரை வேரூன்ற முடியும். எனவே, மோடி தன் சித்து விளையாட்டுக்களால் நிச்சயம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவார்.
அதிமுகவின் பலமே அந்த இரட்டை இலைதான். அது இல்லையென்றால் கூட்டத்தை ஈர்க்கின்ற தலைமை வேண்டும். இரட்டை இலை இல்லையென்றால், மக்களை தன் வயப்படுத்துகின்ற யாரேனும் இன்று அதிமுகவில் இருக்கிறார்களா என்று தேடினால் ....
அப்போது ரத்தத்தின் ரத்தங்களின் ஒரே சாய்ஸ் சரத்குமாராக மட்டுமே இருக்க முடியும்!!

No comments:
Post a Comment