Tuesday, 4 October 2016

நீதிமன்ற தீர்ப்பை மதிக்குமா தமிழக அரசு??

1983, 1997 ல் சிவகாசியில் வடகிழக்கு பருவமழையின் போது நகரை வெள்ளம் சூழந்தது. இதனால் ஆணையூர், சாட்சியாபுரம் செங்குளம், பெரியகுளம், சிறுகுளம் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்தன. கிருதுமால் ஓடைவழியாக வெள்ளம் சாத்தூர் அர்ஜூனா நதியை கடந்தது.
அன்றே வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்பு இருந்ததால் தபால் தந்தி அலுவலகம், நகராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ. முஸ்லிம் தெரு, காத்தநாடார் தெரு, மருதுபாண்டியர் தெரு, காளியம்மன் தெரு, நான்கு ரதவீதிகள் மற்றும் பல தெரு வீடுகளில் மழைநீர் உட்புகுந்தது.
மழை நீர் வடிவதற்குள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்படுமேன அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை எந்த ஒரு நீர் நிலை ஆக்கிரமிப்பு கட்டடங்களும் அகற்றப்படவில்லை. இதற்கு உதாரணமாக சிவகாசி சிறுகுளம் ஆக்கிரமிப்பை சொல்லலாம்.
இதுபோல், நாரணாபுரம் முக்கு ரோடு, கிருதுமால் ஓடை, ஜக்கம்மாள் கோயில் ஓடை உட்பட பல வரத்து கழிவுநீர் ஓடைகளில் கடைகள், கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு பல்வேறு முயற்சி எடுத்தும் எந்த பலனும் எட்டவில்லை. தொடர்ந்து ஆக்கிரமிப்பு, வரத்து ஓடை தூர்வார மறுப்பு, கருவேல முட்புதற்கள் உட்பட பல பிரச்னைகளால், சிவகாசி சுற்று பகுதியில் போதிய மழை பெய்தும் பல கண்மாய்கள் நிரம்ப வில்லை.
குறிப்பாக சிவகாசியில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க வழிசெய்யும் சிறுகுளம், பெரியகுளம் கண்மாய்கள் கூட நிரம்பவும் இல்லை.அதை நிரப்ப வழிவகை செய்யும் முயற்சியை கூட அரசு மேற்கொள்ளவில்லை.
பல ஆண்டாக வட்டார வரிசெலுத்தும் சங்கம் சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய‌ வழக்கில் உச்ச நீதிமன்றம், சிவகாசி பகுதியில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்துள்ளவர்களை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டும் என தீர்ப்பளித்த்து.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் அங்குள்ள சமூக விரோதிகளால் மிரட்டப்பட்டனர். பணி பாதியிலே நின்றது. இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
எனினும், உச்சநீதிமன்றமே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தவிட்டும் இன்னும் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றாமல் பல் இளிக்கிறது.
இன்று, நீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு காவிரியில் நீரைத் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைக்கும் நாம், பொது மக்களுக்கு மிகப்பெரும் இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதி மன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்தாமல் இருக்கும் நம் தமிழக அரசை என்றாவது கேள்வி கேட்டிருக்கிறோமா????

No comments:

Post a Comment