Tuesday, 4 October 2016

முதன்முதலில் பிற்படுத்தபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் காமராஜர்!

1930 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கலந்து கொண்டு, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரிட்டீஷ் பிரதமர் 1932 ஆம் ஆண்டு வகுப்பு வாரி தீர்வு ஒன்றை வெளியிட்டார்.
அந்த சட்டத்தின் படி, 1947 ஆம் ஆண்டு விரிவான சாதிவாரி இட ஒதுக்கீடு ஆணையை சென்னை அரசு அமல் படுத்தியது.
அதன்படி தொழிற்கல்வி நிலையங்களில் ஒவ்வொரு 14 இடத்திலும் பிராமணரல்லாத இந்துக்கள்:6, பிற்படுத்தப்பட்டோர்:2, பிராமணர்:2, ஹரிஜன்:2, முஸ்லிம்:1,கிறித்துவர்:1 என இட ஒதுக்கீடு செய்தது.
அப்போது பிராமண வகுப்பைச் சேர்ந்த திருமதி.செண்பகம் துரைராஜ் என்பவரும், சீனிவாசன் என்பவரும், அரசின் இடஒதுக்கீடு ஆணையால் தங்களுக்கு தொழிற் கல்விக்கான கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. எனவே அந்த சட்டத்தினை ரத்து் செய்ய வேண்டும் என‌ சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மாகாண அரசின் மேல் வழக்குத் தொடர்ந்தார்கள்.
அவர்களுக்காக‌ அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய‌ குழுவில் இடம் பெற்ற வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆஜராகி வாதிட்டர். அதன்படி சாதி வாரியான இட ஒதுக்கீடு 27.7.1950 அன்று ரத்தானது.
அத்துடன், "சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது. அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்" என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்தது.
சென்னை அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதுவும் தள்ளுபடியானது. (AIR-1951-226). இதனால், பிற்படுத்தப் பட்ட சமுதாய மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியானது.
அப்போது சென்னை மாகாண காங்கிரசின் தலைவராக இருந்தார் பெருந்தலைவர் காமராஜர். தமிழகம் கொதித்தெழுந்தது. இட ஒதுக்கீடு கேட்டு பெரியார் பெரும் போராட்டங்களை நடத்தியதோடு, பெருந்தலைவர் காமராஜரையும் கலந்தாலோசித்தார்.
உடனடியாக டெல்லி சென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அன்றைய பிரதமரான நேருவை சந்தித்து விபரத்தை எடுத்துச் சொன்னார். பெருந்தலைவரின் கருத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டார் பிரதர் நேரு.
(((அதற்குக் காரணமும் இருந்தது. இந்தியா விடுதலை பெற்றவுடன் பெரும்பாலான மாநில காங்கிரஸ் கமிட்டிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களும் சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராவதைத்தான் விரும்பினார்கள். ஆனால், காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் நேருவுக்கு ஆதரவாக இருந்தார். அதைப்போலவே, தமிழக மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அவர்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மொத்த ஆதரவையும் நேருவிக்கு ஆதரவாக திருப்பினார். இதுவே, நேரு பிரதமராவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்தது. இதனாலேயே தன் கடைசி காலம் வரை காமராஜர் மீது பெரும் மதிப்பும், பாசமும் கொண்டவராக இருந்தார் பிரதமர் நேரு)))
பிரதமர் நேரு அப்போதைய சட்ட அமைச்சரான அம்பேத்காரை கலந்தாலோசித்தார்.
உடனே 1951‍இல் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 இல் 15(4) என முதல் திருத்தம் கொண்டு வர, பிரதமர் நேரு, 12.5.151 இல் மசோதா தாக்கல் செய்தார். 2.6.51இல் அது நிறைவேறி ஜனாதிபதி 18.6.51 இல் ஒப்புதல் தர சட்டமானது.
அதன்படி, "மாநிலங்கள் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடுச்சட்டம் கொண்டு வருவதை எந்தச் சட்டத்தாலும் தடை செய்யமுடியாது" என அம்பேத்கார் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் மூலம் மாநிலங்களுக்கு அதிகாரம் தந்தார்.
இன்று பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய அனைத்து சாதியினருக்கும் தமிழக மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்ததுடன், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற காரணமாக இருந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்கள் பெருந்தலைவர் காமராஜரும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தந்தை பெரியாரும்தான் என்றால் மிகையல்ல‌.

No comments:

Post a Comment