Friday, 28 October 2016

வீதிகள் தோறும் மரங்களை வளர்ப்போம்

நமது சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக்குவதற்கு ஒவ்வொரு மரமும் உதவுகின்றது. மரங்கள் பிராண (O2) வாயுவை வெளியிடுவதால் சூழல் மாசடைவால் ஏற்படும் நச்சுக் காற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. சூழலியலாளர்களும் மரங்கள் காற்றை வடிகட்டுகின்றன என்று கூறுகின்றனர்.
மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது நிழலை மாத்திரம் பெறும் நோக்கோடு மட்டுமல்லாமல் சுவைதரு கனிகளைப் பெறுவதும் பசித்திருப்போரின் பசியையும் போக்கும் நோக்கமுடையதாகவும் இருத்தல் வேண்டும். ஏழைச் சிறுவர்களின் நலன் கருதி சுவைமிகு கனிகளைத் தரும் நாவல் மரக்கன்றுகளையும், புளிப்பு கசப்பில்லாது காய்களாகவே பறித்துண்ணக்கூடிய மாங்காய்களையும், கனிகளையும் தரும் பாண்டி, சேலம்(கிளிச்சொண்டு), வெள்ளைக்கொழும்பான் போன்ற மாமரக்கன்றுகளை பொது மைதானங்கள், கோயில் வீதிகள் எங்கும் நட்டு வளர்த்தால் ஏழைச் சிறுவர்கள் தங்கள் பசியைத்தீர்ப்பதற்கு பயனுடையதாயிருக்கும். நிழலும், தூய காற்றும் கிடைத்திடும். பரந்து விரிந்து நிழலை தரும் மரங்களான வேம்பு, வாகை, இலுப்பை, மருத மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதும் பொருத்தமுடையது. பரந்த வெளி கொண்ட இடப்பரப்புள்ள இடங்களில் ஆலமரத்தை வளர்த்திடுவதும் போதிய நிழலைப் பெறுவதற்கு பொருத்தமானது.
நாம் கொண்டாடும் விழா ஒவ்வொன்றும் கருத்துடயதாயிருக்க வேண்டும். ஊரின் வளர்ச்சிக்கும் வித்திடுவதாகவும் அமைய வேண்டும். நாம் செலவழிக்கும் பணமும், பொருளும் நாட்டுக்கும் பயனுடையதாய் அமைய வேண்டும். குறைந்த பட்சம் ஊத்தைகளை உணவாக்கி குளத்தைச் சுத்தம் செய்யும் மீன் போலவாவது எமது செயற்பாடுகள் இருத்தல் வேண்டும். ஓவ்வொருவருடைய பிறந்த நாள் விழாவன்றும், மறைந்தோர் ஞாபகார்த்த தினமன்றும் வருடமொருமுறை குறைந்த பட்சம் ஒவ்வொரு
மரக்கன்றுகளையாவது நட்டுவளர்ப்போம். பிறந்தவர்கள் இறந்தவர்கள் பெயரை நட்டுவளர்த்த மரங்கள் பறைந்து கொண்டிருக்கும்.
வே . சு . கருணாகரன்
ஆலோசகர் - சூழலியல் மேம்பாட்டு அமைவனம் ( சூழகம் )

No comments:

Post a Comment