Sunday, 9 October 2016

நாராயணசாமியும், கோழி முட்டையும்

நாராயணசாமி ஒரு நாடறிந்த பக்திபழம். வெள்ளி, செவ்வாய் கிழகைகளில் சைவம் தவிர வேறு எதையும் தொடுவதில்லை.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ஒரு சிற்றுண்டிக்கடையில் அமர்ந்து அவித்த முட்டை ஒன்றைச் சாப்பிட்டார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவும் போதுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அதுவும் ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.

”ஐயோ! ” வெனத் தலையில் அடித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்கு வந்தார்.

தெய்வக்குத்தம் ஆகிவிட்டதேயென்று ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மிகச்சிறந்த யோசனை தோன்றியது. சந்தோசத்தில் நாராயணசாமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தமிழ்ப்பட வில்லன்களைப் போல வானத்தைப் பார்த்து இரண்டு முறையும் பூமியைப் பார்த்து இரண்டு முறையும் சிரித்துவிட்டு ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து “ இன்று நான் இட்டது சைவ முட்டை” என்று எழுதினார்.

பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வலுக்கட்டாயமாக அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார்.

அதாவது கோழி அன்று இட்ட முட்டை சைவம் என்று கோழியே உறுதியளித்துள்ளது என்பதே நாராயணசாமியின் யோசனை.

அதற்கான சாட்சிதான் இந்தப் பத்திரம்.

பின்னர் வழக்கம்போல அன்று மாலை கோவிலுக்குச் சென்றார். ஆனால் திடீரென்று அவர் முன்னால் தோன்றிய கடவுள்,

"முட்டை சாப்பிட்டுட்டு கோவிலுக்குள் வராதே!" என்று மிரட்டலாகச் சொன்னார்.

"ஐயனே ... நான் முட்டை சாப்பிட்டது உண்மைதான், ஆனால் அது சைவ முட்டை. இதோ அந்தக் கோழியே சாட்சியளித்துள்ளது!" என்று அந்தப் பேப்பரைக் கடவுளிடம் நீட்டினார் நாராயணசாமி.

அதை வாங்கிப்பார்த்த கடவுள் ஒரு புன்னைகையுடன் சொன்னார்,

"அட லூசு பயலே ... இது சேவலோட கால் ரேகை!"

No comments:

Post a Comment