Sunday, 9 October 2016

நாராயணசாமியும், முள் கரண்டியும்

மண்ணுசாமி, சுப்புசாமி மற்றும் நாராயணசாமி மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

ஒரு நாள் மூவரும் பயங்கரம‌ன காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நரமாமிசம் சாப்பிடும் மனிதர்களிடம் அகப்பட்டுக்கொண்டார்கள்.

மூன்று பேரையும் கம்பங்களில் கட்டிப்போட்டு விட்டு நரமாமிசம் சாப்பிடுபவர்களின் தலைவன் சொன்னான்,

"உங்களை அவித்துப் பொரித்து பலவிதமாக சாப்பிடப்போகிறோம். அதன் பின் உங்கள் தோல்களினால் படகு, பாய்மரப்படகு செய்து எங்கள் பயணங்களுக்குப் பயன் படுத்துவோம்"

மூன்று பேருமே பாதி செத்துவிட்டார்கள்.

வெலவெலத்து நடுங்கிய அவர்களைப் பார்த்து நரமாமிச உண்ணிகளின் தலைவன் மேலும் சொன்னான்,

"எனினும் உங்களைப் பார்த்தால் பாவமாகவும் இருக்கிறது. உங்கள் மரணத்தின் முன் இறுதி ஆசையொன்றைச் சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன்"

"எனக்கு துடிதுடித்தெல்லாம் சாக முடியாது. நீங்கள் கொல்வதற்கு முதல் நானே இறந்து விடுகிறேன். தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள்" என்றார் மண்ணுசாமி.

கொடுக்கப்பட்டது.

"நான் இறந்தது பற்றி எனது வீட்டவருக்கு தகவல் சொல்லவேண்டும். தாளொன்றும் பேனாவும் கொடுங்கள் ... முகவரி கொடுக்கிறேன்" என்றார் சுப்புசாமி.

கொடுக்கப்பட்டது.

மூன்றாவது நம்ம நாராயணசாமி,

"எனக்கு ஒரு முள்ளுக்கரண்டி (ஃபொர்க்)கொடுங்கள்"' என்றார்.

நரமாமிச கும்பலுக்குப் புரியவில்லை.... முள்ளுக்கரண்டி எதற்கு?
எனினும் கொடுத்தார்கள்.

அதை வாங்கிய நாராயணசாமி தன் உடலெங்கும் சரமாரியாகக் குத்த ஆரம்பித்தார். உடலெங்கும் காயம், துளைகள்... இரத்தம் ஓடுகிறது.

ஒரு இடம் மிச்சமில்லாமல் காயங்கள்.

நரமாமிச கும்பலில் அனைவரும் பயந்து போய், அசந்து போய், திடுக்கிட்டுப் போய் நிற்கிறார்கள்...

தலைவன் உட்பட எல்லோரையும் ஒரு தடவை பார்த்த நாராயணசாமி,  ஒரு குரூரச் சிரிப்போடு சொன்னார்,

"ஏனடா .... என்னைச் சாப்பிட்ட பிறகு என் தோலில் படகு கட்டப் போறீங்களா? இப்ப என்ன செய்வீங்கடா? ஓட்டைப் படகிலே மூழ்கி நரகத்துக்குப் போங்கடா"

No comments:

Post a Comment