நம்ம நாராயணசாமி கொஞ்சம் விவரமான கிராமத்து ஆசாமி.
ஒரு நாள் அவங்க வீட்டுல தோசைக்கு போட்டிருந்தாங்க...அதுல என்ன விஷேசம்னா, நாராயணசாமியோட மனைவி காலையில எத்தனை மணிக்கி எழும்பி தோசை சுட்டாலும், முதல்ல நாலு தோசையாவது சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்குவது அவருக்கு வழக்கம்.
அன்னைக்கும் அப்படித்தான்... காலையில நாலு மணி இருக்கலாம்...தோசைக்கல்லுல மாவு ஊத்துற சத்தம் கேட்டு முழிச்சிட்டாரு நம்ம ஆளு...அதுக்கு பிறவு தூக்கம் வரல...கண்ணை முழிக்காமலேயே அங்கே நடக்குறதை கவனிக்கிகிட்டிருந்தாரு..
கொஞ்ச நேரம் கழிச்சது...
"என்னங்க தோசை சாப்பிடுறீங்களா" என்றபடி தட்டை கட்டிலில் கொண்டு வைத்தாள் நா.சா.வின் மனைவி.
அப்பொழுதுதான் விழிப்பதுபோல் பாவ்லா காட்டியவர், தட்டிலிருந்த தோசையை பார்த்தார்....எண்ணினார்....
கோபத்தில் அந்தக் காலையிலும் கண்கள் சிவந்தன நாராயணசாமிக்கு...
"ஏண்டி...என்னை என்ன முட்டாபயன்னு நினைச்சியா...15 தோசைக்கு பதிலா 7 தோசைதான் வச்சிருக்கே...எனக்கு முன்னாடியே மீதிய நீ தின்னுட்டியா???"
"இல்லைங்க நான் சாப்பிடல...மொத்தமே ஏழு தோசைதான் சுட்டேன்"
"ஏமாத்தாதேடி....15 "சுர்ரூ" நான் கேட்டேன்டி"
நாராயணசாமியின் மனைவிக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.
"அட நாசமத்துப்போன நாசா....தோசை முதல்ல ஊத்தும்போது ஒரு தடவை "சுர்ரூ"ன்னு கேக்குமா...அப்புறம் மாத்தி போடும்போது ஒரு தடவை "சுர்ரூ"ன்னு கேக்குமா...அப்படின்னா ஒரு தோசைக்கு ரெண்டு "சுர்ரா"...மொத்தம் ஏழு தோசைக்கு 14 "சுர்ரா"...அடுத்ததா ஒரு தோசைக்கு ஊத்தியிருக்கேன்...ஆக மொத்தம் 15 "சுர்ரூ" ஆச்சா...."
வாயடைத்துபோனார் நாராயணசாமி.
No comments:
Post a Comment